Tuesday, October 13, 2009

கிச்சு கிச்சு மனிசா!...


எமது உடம்பில் வயிறு அக்குள் போன்ற பகுதிகளில் இன்னொருவர் லேசாக வருடும் போது ஒரு வித கூச்ச உணர்வு எமக்கு ஏற்பட்டு முதல் ராத்திரியில் புதுப்புருஷன் முன் வளைந்து நெளியும் புதுப்பொஞ்சாதி போல நாங்கள் வளைந்து நெளிந்து விடுகிறோம்.இந்த இரண்டாம் நபரின் தொடுதலைத்தான் கிச்ச கிச்சு மூட்டுவதென்று பேச்சு வழக்கில் சொல்லப்படுகிறது.

நபருக்கு நபர் வேறுபடும் இந்த கூச்ச உணர்வை அடிப்படையாக வைத்து ஒருவரைப்பற்றிய மதிப்பீட்டை செய்பவர்களும் நம்மில் இருக்கின்றார்கள்.
ஒரு பெண் அதிக கூச்சமுடையவளாக இருப்பது அவளுக்கு அழகு சேர்ப்பதாய் கருதப்படுகிறது.ஒரு பெண் அறவே கூச்சமில்லாதவளாக இருக்குமிடத்து அவளின் உடம்பு பல கைகள் பட்டுப்பழகிய உடம்பாக தீர்ப்பளிக்கப்பட்டு அவளை கலங்கப்பட்டவளாக பார்க்கும் வழமையும் நம்மிடையே உண்டு. இதற்காகவே கிச்சு கிச்சு மூட்டும்போது கூச்சம் வராவிட்டாலும் கூட பெண்கள் அதிகமாக நெளிவதைக்காணலாம்.இது இப்படியிருக்க ஆண்களின் நிலையோ இதைவிடக் கொடுமையானது.ஒரு ஆண் மகனுக்கு கிச்சு கிச்சு மூட்டும்போது அவன் பெண்களைப் போன்று அளவுக்கதிகமாக வளைந்து நெளிவானாயின் அவனை பெண்மைத்தனமானவன்(பொன்னையன்) என்று கிண்டல் செய்வார்கள்.மாறாக எவனொருவன் கிச்சு கிச்சு மூட்டப்படும்போது எந்தவித கூச்ச உணர்வுமின்றி இருப்பானாயின் அவனை உணர்ச்சியற்றவன் (சொனப்பறந்தவன்) என்று மகுடம் சூட்டிவிடுவார்கள்.

மனித உடலில் இவ்வாறு கூச்சத்தை உண்டுபண்ணும் இடங்கள் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். பலருக்கு வயிற்றுப்பகுதியிலும் அக்குள் பகுதியிலும் கூச்சம் ஏற்படும். சிலருக்கு கழுத்துப்பகுதியில் ஏற்படும். வேறு சிலருக்கோ கால்களிலும் கைகளிலும் கூட ஏற்படும். சுஹாசினியின் இயக்கத்தில் வெளிவந்த 'இந்திரா' திரைப்படத்தில் 'தொடத்தொட மலர்ந்ததென்ன...' என்று ஆரம்பிக்கும் பாடலில் நாயகன் அரவிந்தசாமி நாயகி அனுவுக்கு வயிறு மற்றும் கழுத்துப்பகுதியில் கிச்சு கிச்சு மூட்டுவார் அப்போது நாயகி கூச்சம் தாங்கமுடியாமல் துடிதுடிப்பார்.(நாயகி மாற்றான் கை படாத ஒழுக்கமானவள் போலும்) பின்னர் நாயகி அனு நாயகன் அரவிந்தசாமிக்கு வயிறு அக்குள் கழுத்து உட்பட பல இடங்களில் கிச்சு கிச்ச மூட்டுவார். ஆனால் நாயகனோ எந்தவித கூச்ச உணர்வுமின்றி மரக்கட்டைபோல் இருப்பார். ஏமாற்றமடைந்த நாயகியோ நாயகனை கீழே விழுத்திவிட்டு உள்ளங்காலை வருடுவார் அதன்போது நாயகன் கூச்ச உணர்வு மிகுந்து துடிப்பார்.நாயகனுக்கு கூச்ச உணர்வு உள்ளங்காலில் இருந்திருக்கிறது.

இந்த உள்ளங்கால் பற்றி ஒரு சுவாரஷ்யமான வரலாறு இருக்கிறது. சக்தி வாய்ந்தவருக்குள்ள ஒரேயொரு பலவீனத்தை 'அகீல்ஸ் ஹீல்' என்று சிலேடையாகச் சொல்வார்கள். எந்தவொரு ஜாம்பவானுக்கும் ஏதோவொரு பலவீனம் கட்டாயம் இருக்கும்.அத்தகைய பலவீனம் சில நேரங்களில் குறித்த நபருக்கு எமனாக மாறிவிடுவதும் உண்டு;.'அகீல்ஸ் ஹீல்' என்பதுவும் இத்தகைய பின்னனியைக்கொண்டதுதான்.

நம் புராணத்தில் துரியோதனனின் தொடையில் பீமன் அடித்த பிறகுதான் அவன் உயிர் போனது.அதே போல கிரேக்கப்புராணத்தில் அகிலீஸின் உள்ளங்காலில்தான் அவன் உயிர் இருந்தது. பிற்காலத்தில் 'ட்ராய்' போரில் தன் வீரமகன் கொல்லப்படப் போகிறான் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அவன் தாய் தீடிஸ் சாகாவரம் தரும் ஆற்றல் கொண்ட 'ஸ்டைக்ஸ்' எனும் மந்திர நதியில் குழந்தை அகிலீஸைத் தலைக்குப்புற முக்கி எடுக்கிறாள்.ஆனால் அவள் பிடித்திருந்த குதிகாலில் தண்ணீர் படாததால் அதுவே அவனுக்கு 'ட்ராய்' யுத்தத்தில் எமனாகிப்போனது.'ட்ராய்' யுத்தத்தில் இளவரசன் பாரீஸ் விட்ட விஷ அம்பு அகிலீஸின் குதிகாலைத் துளைத்து அவன் உயிரைப் பறித்தது என்கின்றது அகிலீஸின் வரலாறு.

இனிமேல் யாராவது உங்களுக்கு கிச்சு கிச்சு மூட்டினால் நெளிவதா? இல்லையா? என்பது பற்றி உங்களுக்குள் பட்டிமன்றம் நடத்துங்கள். அதேபோல் மற்றவரின் 'அகிலீஸ் ஹீல்' ஜ அடையாளம் கண்டு உங்கள் காய்களை நகர்த்துங்கள். உங்களுடைய 'அகிலீஸ் ஹீல்' ஜ மற்றவர் அறிந்துகொள்வதற்குள் நீங்கள் அதை அறிந்துகொள்ள முயலுங்கள்.

அன்பே சிவம்

2 comments:

  1. குதிகாலைக் கூட வரலாறு விட்டு வைக்கவில்லையா?

    ReplyDelete
  2. தம்மி!!!!!!!!! முஸ்ஸர்ரப், இதற்கு நான் ,..................
    என்ன சொல்ல.......
    தேடல் உள்ள உயிர்களுகே தினமும் பசி இருக்கும்.........

    ReplyDelete